தாய்மை போற்றுதும்… தாயை வணங்குதும்…
“வாழ்க்கையில் ஏற்பட்ட குடும்பச் சரிவாலோ, ஏழ்மையாலோ கலங்காத மனோபலம்; பின்பு, குடும்பத்துக்கு வந்த ஏற்றத்தாலும், செல்வத்தாலும் புகழாலும் சற்றும் மாசுபடாத உள்ளம்;“
வாழ்க்கையில் ஏற்பட்ட குடும்பச் சரிவாலோ, ஏழ்மையாலோ கலங்காத மனோபலம்; பின்பு, குடும்பத்துக்கு வந்த ஏற்றத்தாலும், செல்வத்தாலும் புகழாலும் சற்றும் மாசுபடாத உள்ளம்; எந்த விதமான மனசஞ்சலமும் இல்லாமல் “விதவா தர்மத்தை’ 58 ஆண்டுகள் சாஸ்திர முறைப்படி அனுசரித்த ஒரு துறவியின் புனிதம்; பொன்னாசையோ, மண்ணாசையோ மட்டுமல்லாமல் மனிதர்களுக்கே இருக்கக்கூடிய சின்னச் சின்ன ஆசைகள் கூட இல்லாத பற்றற்ற அணுகுமுறை; குழந்தைகள், குடும்பத்தினர், உற்றார், உறவினர் இவர்களுக்காகத் தன்னலமில்லாமல் உடலை செருப்பாக்கி உதவும் இயல்பு, கடவுளிடமும் பெரியோர்களிடமும், குறிப்பாக, காஞ்சி மகா ஸ்வாமியிடம் அளப்பரிய பக்தி; பெரிய அறிவுரைகள் கூறாமல் மற்றவர்களின் மனதை தன்னுடைய நடத்தையால் மாற்றும் தவ வலிமை — இந்த குணங்களெல்லாம் சேர்ந்து ஒரு மனித உருவம் எடுத்தால் எப்படி இருக்கும்?
கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி தன்னுடைய 97-வது வயதில் இறைவனடி சேர்ந்த எனது தாய்தான் அந்த “மனித தெய்வம்’. எனக்கு இந்த ஜென்மாவில் கிடைத்த பெருமைகளில் எல்லாம் மிகப்பெரிய பெருமை, அவளுக்கு மகனாகப் பிறந்ததுதான் என்று நான் கருதுவதில் என்ன தவறு இருக்க முடியும்! அவள் குடும்பத்தில் வாழ்ந்த சந்நியாசி. அவளுக்குத் தெரிந்த மந்திரம் எல்லாம் நெறி தவறா வாழ்க்கையும், அறம் தவறாக் குடும்பமும், ஒருவருக்கொருவர் ஆற்றும் எதிர்பார்ப்பில்லாத உழைப்பும்தான்.
எந்த மாமியாரைப் பற்றி மருமகள்கள் நல்லபடியாகப் பேசுகிறார்களோ அந்த மாமியார் நல்ல மாமியார் மட்டுமல்ல, ஒரு உயர்ந்த குணம் உள்ளவராகத்தானே இருக்க முடியும்? என் தாயின் மேன்மையைப் பற்றித் தெரிந்துகொள்ள, பொருளாதாரத்தில் வேறுபட்ட பல குடும்பங்களிலிருந்து வந்த அவருடைய நான்கு மருமகள்களிடமும் பேசினால் போதும்.
ஒரு கட்டத்தில் வயோதிகம் காரணமாக ஒன்பது ஆண்டு காலம் இயலாமை வாய்ப்பட்டு எனது தாய்க்கு மருமகள்கள்தான் எல்லா பணிவிடைகளையும் செய்யவேண்டும் என்கிற நிலைமையில் இருந்தபோதும்கூட, பக்தியுடனும் அவர்கள் தினசரி பணிவிடை செய்ததை வைத்தே அவர் எப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம். தங்கள் மாமியார் காலமான பிறகு மருமகள்கள் “”எங்களுக்குத் தாயாகவும், ஆசானாகவும், வழிகாட்டியாகவும் இருந்து எங்களுக்கு ஆசாரமும், கலாசாரமும், பதிபக்தியும், பண்பும், கூட்டுவாழ்க்கையின் உயர்வையும் சொல்லிக் கொடுத்த, நீங்கள் எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே” என்று அவர் மறைந்து பல நாட்கள் ஆன பிறகும்கூட அவரை அடிக்கடி நினைவுகூர்ந்து புலம்புகிறார்கள் என்றால், அந்த மாமியார் – என் தாய் – எப்படிப்பட்டவளாக இருந்திருக்க வேண்டும்? மருமகள்கள் மட்டுமல்ல, பேத்திகள், பேரன்களின் மனைவிமார்கள் எல்லோருமே இன்னும் கூட அவரது பிரிவின் துயரிலிருந்து மீண்டபாடில்லை. அப்படிப்பட்டவள் என் அம்மா.
அந்த நல்ல மருமகள்களை, அதற்குப் பிறகு அவர்களுடைய மகள்களை, மருமகள்களை உருவாக்கிய என் அம்மா, தன்னைப்போல் அடுத்த இரு தலைமுறைகளை உருவாக்கியிருக்கிறார் என்றுதானே பொருள்? நான் எழுதுவதில் ஒரு வார்த்தை கூட மிகையல்ல என்பதை என் குடும்பத்துடன் பழகிய நூற்றுக்கணக்கானோர் வழிமொழிவார்கள்.
இந்தக் காலத்துக்கு ஒத்துவராது என்று மேலைநாட்டு நாகரிகத்தைப் பார்த்து மயங்கும் பல படித்த மேதாவிகள் கருதுகிற, ஆனால், எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய, மன நிம்மதி தரக்கூடிய, வாழ்க்கை முறையை அவளிடமிருந்து பெற்ற எங்கள் கூட்டுக்குடும்பத்தில் என்னையும் சேர்த்து நான்கு பிள்ளைகள், ஒரு பெண். 15 பேரன்-பேத்திகள், இதுவரை பிறந்திருக்கும் 17 கொள்ளுப்பேரன்-பேத்திகள் உள்பட 37 பேர். அந்தப் பெரிய குடும்பத்துக்கு அவள் தலைவி மட்டுமல்ல, தெய்வமும் கூட!
அவள் பள்ளிக்கூடம் சென்றதில்லை. முறையாக எழுத்தறிவு பெற்றதில்லை. படிக்கத் தெரியும் அவ்வளவுதான். அவள் பிறந்தது விழுப்புரம் அருகில் இருக்கும் பாணாம்பட்டு என்கிற கிராமம். திருமணம் ஆனது தனது ஒன்பதாவது வயதில். அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சுவாமிநாதன் என்பவரைத்தான் கணவனாக வரித்தார். 1950-களில் பல ஆண்டுகள் மழை பெய்யாததால், நிலங்களை ஒன்றுக்குப் பின் ஒன்றாக விற்க வேண்டியதாயிற்று. குடும்பம் வறுமைக்கோட்டுக்குள் நுழைகிறது. அந்த நிலையில் 1955-இல் கணவனை இழந்து விதவையாகிறாள் என் தாய். அப்போது அவளுக்கு வயது 39.
அதற்குப் பிறகு வறுமையுடன் போராட்டம். உற்றார், உறவினர்களின் உதாசீனம். பெரிய பிள்ளைகள், என்னுடைய இரண்டு அண்ணன்மார்கள், சென்னை சென்று, சிம்சன் கம்பெனியில் வேலையில் அமரும் வரை அந்தப் போராட்டம் தொடர்கிறது. பிள்ளைகள் தலை எடுத்து, கிராமத்தில் குடும்பத்தின் கெüரவம் திரும்பும்வரை அவள் அங்கிருந்து வெளியேறவில்லை. நான் பள்ளிப்படிப்பு படித்து முடிக்கும்வரை கிராமத்திலேயே இருந்துவிட்டு, அதன் பிறகுதான் சென்னை வருகிறாள் என் அம்மா.
காரணம், தலைகுனிந்து வெளியேற அவள் தயாராக இல்லை. தலைநிமிர்ந்த பிறகுதான் வெளியேற வேண்டும் என்கிற வைராக்கியத்தில் ஜெயித்த பிறகுதான் வெளியேறினாள். அவளது அந்த வைராக்கியம்தான் இன்று என்னைப் போற்றுவார் போற்றலுக்கும், தூற்றுவார் தூற்றலுக்கும் இடையில் தலைநிமிர்ந்து எந்த விமர்சனங்களையும் எத்தகைய பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் மனவலிமையை அளித்திருக்கிறது என்று கருதுகிறேன்.
சென்னையில் முதலில் ஒண்டிக்குடித்தனம். பின்பு நான்கு பிள்ளைகளும் படிப்படியாக நல்ல நிலைக்கு வந்து, திருமணம் ஆகிக் குழந்தைகள் பிறந்த பிறகுதான் சொந்த வீடு வாங்கினோம். அதற்கு முன்னால், 12 பேர் அடங்கிய எங்கள் குடும்பத்திற்கு வாடகைக்கு வீடு தர யாரும் முன் வராமல் இருந்த சோதனையான காலகட்டத்தையும் சிரித்துக்கொண்டே எதிர்கொண்டாள் என் தாய்.
பின்பு சொந்த வீடு வந்தது. அதன் பின் சொந்த வீடுகள் வந்தன. அம்மாவின் ஆசி பெற உற்றார் உறவினர், பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் வீட்டுக்கு வருவார்கள். ஆனால், என் தாயின் வாழ்க்கையில் ஒரு மாறுதலும் கிடையாது. வறுமையில் அவள் எப்படி துவளவில்லையோ அதேபோல் பெருமைகளும் அவளை மதிமயங்க வைக்கவில்லை. இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றுபோல ஏற்றுக்கொண்டாள் அவள்.
அவளுக்கு எப்போதும்போல இரண்டு வெள்ளைப் புடவைகள் – ஒன்று அவள் மேல்; இன்னொன்று கொடியின் மேல் – மடிப்புடவையாக உலர்ந்து கொண்டிருக்கும். அவள் இறக்கும் வரை இரண்டே புடவைகள்தான்.
அவளுக்கென்று ஒரு பெட்டியோ, அலமாரியோ கிடையாது. அவளுக்கென்று வைத்துக்கொள்ள ஏதாவது இருந்தால்தானே பெட்டியும் அலமாரியும் தேவை? படுக்க ஒரு பாய் மட்டும்தான். மழைக் காலத்தில் பாயின் கீழே போட ஒரு கோணிப்பை; தலைக்கு வைத்துக்கொள்ள ஒரு மரக்கட்டை; குடிதண்ணீர் வைத்துக்கொள்ள ஒரு சொம்பு; ஜபம் செய்ய துளசி மாலை; படிக்க, பகலில் தினமணி பத்திரிகை, இரவில் ராமாயணம், கந்தபுராணம், மகாபாரதம் போன்ற புத்தகங்கள் — இவ்வளவுதான் அவளுடைய ஆஸ்தி. அவள் கையில் ஒரு விசிறிதான் இருக்கும். எனக்கு இதுவே போதும் என்று நினைக்கும் மனப்பக்குவம் என் அம்மாவுக்கும் இருந்தது.
வராந்தாவிலோ கூடத்திலோ தரையில்தான் படுப்பாள் என் தாய். 2004-இல், இடுப்பில் எலும்புடைந்து வேறு வழியில்லாததால் என் தாய் கட்டிலில் படுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் என் தாய் கட்டிலில் உயிர் விட்டாள். இல்லையென்றால் தரையில், பாயில்தான் உயிர் துறந்திருப்பாள். 2004-க்கு முன்னும், பின்னுமான வித்தியாசம் அவ்வளவுதான்.
அன்னத்தை அதிகம் சமைக்க வேண்டும் என்று கூறுகிறது உபநிஷதம். பிறருக்கு அளிக்காமல் தான் மட்டும் சமைத்து உண்ணுவது பாவம் என்கிறார் கிருஷ்ண பகவான். இந்த உயர்ந்த செயல்களை உபநிஷதத்தையும், கீதையையும் படிக்காமலேயே என் தாய் செய்து வந்தாள். எங்கள் வீட்டில் குறைந்தது, குடும்பத்தினர் அல்லாத ஐந்து அல்லது ஆறு பேராவது ஊர்க்காரர்களோ, நண்பர்களோ தங்கி இருந்து படிப்பதோ, வேலைக்குப் போவதோ சகஜமாக இருந்தது. எங்கள் ஊரில் இருந்த பலரும், சென்னையில் படிக்க, வேலை பார்க்க என்றால் நேராக எங்கள் வீட்டிற்கு வந்த விடுவார்கள். அம்மா இருக்கிறார்கள் என்கிற தைரியம் அவர்களுக்கு!
கூட்டுக்குடும்பமான எங்கள் வீட்டில் நாங்களே 20 பேர். தங்கியிருந்து படிப்பவர்கள் என நான்கைந்து பேர். மேலும் விருந்தினர்கள். அவ்வப்போது வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள். இவ்வளவு பேருக்கும் என் தாய்தான் சமைப்பாள், பரிமாறவும் செய்வாள். வீட்டில் எல்லோரும் உண்ட பிறகே, தான் உண்ணுவாள்.
1964-இல் சென்னை வந்த எங்களுக்கு குடும்ப டாக்டர் எங்கள் அம்மாதான். வாரா வாரம், ஏதாவது கஷாயங்கள் தந்துகொண்டே இருப்பாள். மிளகு, ஜீரா ரசம், மிளகு-வெந்தையக் குழம்பு போன்ற மருத்துவக் குணங்களுள்ள உணவைத்தான் சமைப்பாள். உணவின் மூலமே குடும்பத்தை நோய் நொடியில்லாமல் பாதுகாக்க முடியும் என்பதை மருத்துவம் படிக்காமலே அவள் படித்து வைத்திருந்தாள். இன்றுவரை நாங்கள் அம்மாவின் பாணியை மாறாமல் கடைப்பிடிக்கவும் செய்கிறோம். எங்கள் குடும்பத்தில் இன்றுவரை எந்தவிதமான பெரிய உடல் நலக்குறைவு இல்லாமல் இருக்க அதுவும் ஒரு பெரிய காரணம்.
காலை நாலரை மணிக்கு ஸ்லோகங்கள் சொல்லிக்கொண்டே வீடு, வாசல் எல்லாம் பெருக்குவாள், தண்ணீர் தெளிப்பாள், கோலம் போடுவாள். இது அம்மாவுடைய 87 வயது வரை ஒரு நாள்கூடத் தவறாமல் தொடர்ந்தது. ஒரு நாளைக்கு 13-14 மணி நேரம் வேலை என்பது என் தாய்க்கு சர்வ சாதாரணம். மிச்ச நேரம் தான் ஜபமும், தூக்கமும்.
ஆசார அனுஷ்டானங்களில் அவள் நெருப்புபோல. சின்னக் குழந்தை கூட அவள் மேல் பட்டுவிட்டால் உடனே குளித்துவிட்டுத்தான் மறு வேலை. அந்த அளவுக்கு அவள் தன்னுடைய உடலைப் புனிதமாக வைத்திருந்தாள். நாங்கள் எங்கள் அம்மா மடியில் படுக்க வேண்டுமென்றால் இரவு 10 மணிக்கு அவள் படுக்கும்போதுதான் கிட்டே போக முடியும். விதவா தர்மத்தை அந்த அளவுக்குக் கடைப்பிடித்த, உண்மை சன்யாசி அவள்.
என் அன்னை பெண்ணாக இருந்தும், விதவை ஆன பிறகு, பொன்னைத் தொட்டது கிடையாது. நான் பார்த்து பொன்னே அணியாத, என் அம்மாவுக்கு கனகாபிஷேகம் செய்ய வேண்டும் என்று எங்கள் ஆசை. ஆனால், மறுத்துவிட்டார் அம்மா. அவள் இறந்த பிறகு, தகனம் செய்யும்போது அவளுடைய உடலில் ஒரு பவுன் நாணயத்தை வைத்தோம். மறுநாள் சஞ்சயனத்திற்கு அஸ்தி எடுக்கும்போது, அந்தத் தங்கக் காசு கொஞ்சமும் சேதமாகாமல், ஒரு மூலையில் மட்டும் சற்றுக் கருகி இருந்த நிலையில் கிடைத்தது. இதுவரை தங்கக் காசு அப்படியே கிடைத்ததே இல்லை என்று பிரமிப்புடன் சொன்னார் அங்கு இருக்கும் மயானக் காப்பாளர்.
தொண்ணூற்று ஏழு வயதில் என் தாயின் உடல், நிறத்தில் தங்கம்போல இருந்தது. இறந்த பிறகும் அப்படியே, பேத்திகளெல்லாம் பாட்டியின் கால், கை விரல்களுக்கு நகம் வெட்டும்போது, “”பாட்டி உன் கால், விரல்கள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறது, ஏன் எங்களுக்கு அந்த அழகான கால்களையும் விரல்களையும் நீ கொடுக்கவில்லை?” என்று கேட்கும் அளவுக்கு, அந்த வயதிலும் அழகானவளாக இருந்தாள் எங்கள் தாய். அது மனித உடல் இல்லையே, ஒரு யோகியின் உடல் அல்லவா, அதுதான் காரணமோ என்னவோ?
நான் பிரபல ஆடிட்டராகப் பெயர் எடுத்த பிறகும், பத்திரிகைத் துறையிலும் மற்ற துறைகளிலும் எனக்கு தேசிய அளவில் பெயரும் புகழும் வந்த பிறகும், என் தாய் “இதோ பார், என்னுடைய பிள்ளையை’ என்று வெளியில் பேசியதே கிடையாது. மனதுக்குள்ளே பெருமை இருந்திருக்கலாம். ஆனால், அவள் வெளியில் ஒரு வார்த்தை கூட அது பற்றிப் பேசியது கிடையாது.
÷1987-இல் என்னை மத்திய அரசு கைது செய்தபோது, சிறையில் இருந்து, நான் வெளியில் வருகிற வரை, அம்மா யாரிடத்திலும் பேசவே இல்லை. சரியாக உண்ணவில்லை. தன் பிள்ளை கைதாகி, குடும்பத்துக்கு இழுக்குத் தேடி விட்டானே என்று மனதிற்குள் வருந்தினாள். போலீஸôல் கைது செய்யப்படுவது என்பது குடும்பத்துக்கு இழுக்கு, கெüரவக் குறைச்சல் என்று கருதிய தலைமுறை என் தாயுடையது. தினமணி பத்திரிகையை, குறிப்பாக, ஏ.என். சிவராமனின் தலையங்கங்களையும், கட்டுரைகளையும் எழுத்துவிடாமல் படிக்கும் என் அம்மாவுக்குத் தவறு செய்தது அரசாங்கம்தான் என்கிற விஷயம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்த பிறகுதான் அவள் மனதில் பட்ட காயம் நீங்கியது.
அவள் எனக்கு ஏற்பட்ட அருமை, பெருமைகளைப் பெரிதாக நினைக்கவில்லையே, அது ஏன் என்று பல நாள் நான் யோசித்திருக்கிறேன். பிறகு, எனக்குப் புரிந்தது இதுதான். நான் என்னதான் புகழ் பெற்றவனாக இருந்தாலும் அவள் பார்வையில் நான் நான்கு பிள்ளைகளில் ஒருவன், அவ்வளவே. இப்படி எல்லோரையும் சமமாகப் பாவிக்கும் தன்மை அவளிடம் இருந்ததால்தான் எங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பமாக இன்றும் தொடர்கிறது.
அதுமட்டுமல்ல, நாட்டின் பெரிய பெரிய தலைவர்கள், பெரிய பெரிய தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள் அறிவுஜீவிகள் எல்லாம் என் அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்றிருக்கிறார்கள். அதனால் அவள் பூரித்துப் போனது கிடையாது. தாழ்ந்திருந்தபோது அவளை உற்றார் உறவினர் சிறுமைப்படுத்தியதை அவள் எப்படி எதிர்கொண்டாளோ, அதுபோல உயர்ந்த நிலை வந்தபோதும் அதையும் எடுத்துக்கொண்டாள். அதனால்தான் அவள் ஒரு யோகி.
÷என் அம்மா தியாகத்தின் உருவான தாய்மைக்கு ஓர் உதாரணமே தவிர, விதி விலக்கல்ல. இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களில் என்னுடைய அம்மாபோல ஒரு தாய் தன்னுடைய உடல், பொருள், ஆவியை குடும்பத்துக்காகவும், சமுதாயத்துக்காகவும் தியாகம் செய்வதால்தான் இன்று நம் சமுதாயம், கலாசாரம், குடும்பங்கள் இவையெல்லாம் காப்பாற்றப்படுகின்றன. அதனால்தான் நம்முடைய பொருளாதாரம் வலிமையாக இருக்கிறது.